தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராகப் சுப்பிரமணியன் காசிராஜன் நியமனம்!

இந்தியாவின் முன்னோடி வேளாண் கல்வி நிறுவனமான கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) புதிய பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் மூத்த வேளாண் விஞ்ஞானியும், தலைசிறந்த கல்வியாளருமான முனைவர் சுப்பிரமணியன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகால ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட இவரது நியமனம், தமிழக வேளாண் ஆராய்ச்சித் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பேராலையூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை மற்றும் முதுநிலை வேளாண் படிப்புகளை முடித்துவிட்டு, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மாணவர் பருவத்திலேயே இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) உதவித்தொகை பெறும் அளவுக்குத் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

முனைவர் சுப்பிரமணியன் காசிராஜன் சர்வதேச அளவிலும் தனது ஆராய்ச்சி முத்திரையைப் பதித்தவர். இந்திய–சீனா ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் மட்கும் பிளாஸ்டிக் மூடாக்கு குறித்து மேம்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, உலகின் மிக உயரிய ‘புல்பிரைட்’ (Fulbright) ஆய்வாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் நுண் தட்பவெப்பநிலை மாற்றங்கள் குறித்து உயர்நிலை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நிர்வாக ரீதியாக, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பாலார் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை மிகச் சிறப்பாக வகித்துள்ளார்.

வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. நெல், நிலக்கடலை, எள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்களில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட புதிய ரகங்களை வெளியிடுவதில் இவர் முக்கியத் தூணாக இருந்துள்ளார். குறிப்பாக 7 நெல் ரகங்கள் மற்றும் 6 நிலக்கடலை ரகங்கள் இவரது தீவிர ஆய்வின் மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளன. காவேரி டெல்டா பகுதி விவசாயிகளுக்காக இவர் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணை முறைகள் இன்றும் வெற்றிகரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 150-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஐந்து புத்தகங்களை எழுதியுள்ள இவருக்கு, இந்திய உழவியல் சங்கத்தின் சிறந்த விஞ்ஞானி விருது உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அனுபவமிக்க இவரது தலைமையின் கீழ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளிலும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version