திண்டுக்கல்லில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும் விளங்கும் தமிழ் மொழி, அரசு நிர்வாகத்தில் முழுமையாகப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுக்கூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து உற்சாகமாகத் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம் மற்றும் பூமார்க்கெட் வழியாகச் சென்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியவாறு சென்றனர். குறிப்பாக, அரசு அலுவலகங்களில் கோப்புகள் முதல் பெயர்ப் பலகைகள் வரை அனைத்திலும் தமிழ் மொழியே முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ., திருமலை, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் விஜயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், அரசு ஐ.டி.ஐ மற்றும் பல்வேறு பள்ளி மாணவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மார்ச் பாஸ்ட் செய்வது போல் அணிவகுத்துச் சென்றது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இந்த நிகழ்வின் பின்னணியாக, 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை இளைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்துவதும், அரசுப் பணியாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் அன்றாடப் பயன்பாட்டில் தமிழுக்கு முன்னுரிமை அளிப்பதை ஊக்கப்படுத்துவதுமே இந்தப் பேரணியின் நோக்கமாக அமைந்தது. நிறைவாக, தமிழ் மொழியின் சிறப்பைத் தற்கால டிஜிட்டல் உலகிலும் நிலைநிறுத்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி தமிழார்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version