திருச்சி மாவட்டம் வயலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சையைச் சேர்ந்த 18 வயதான அபிஷேக், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தனது விடுதியின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், விடுதி வளாகத்திலேயே மது அருந்தியதாகக் கூறி வார்டன் அபிஷேக்கை கண்டித்ததுடன், கல்லூரிக் கட்டணம் நிலுவையில் இருந்ததாகக் கூறி, விடுதி காப்பாளர் அவரது செல்போனை உடைத்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மனமுடைந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவரின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக எம்ஜிஎம்ஹெச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தந்தை வெங்கடேசன், “விடுதி காப்பாளர் என் மகனை சித்திரவதை செய்திருக்கிறார்” என்று உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எனினும், காவல்துறை அந்த புகாரை ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவரின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டு, விடுதி காப்பாளரை கைது செய்யக் கோரினர். பின்னர், காவல்துறையினர் “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
