திருப்பத்தூர் :
திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி கல்வி கற்றுவந்த அவரை, கடந்த சில நாட்களாக காணவில்லை என கூறிய பள்ளி நிர்வாகம், இது தொடர்பாக முகிலனின் பெற்றோருக்கு தகவல் அளித்தது.
உடனடியாக அவசரத்தில் திருப்பத்தூர் வந்த பெற்றோர், முகிலனை தேடி காவல்துறையிடம் புகார் செய்தனர். இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள கிணற்றில் முகிலனின் சடலம் கிடைத்தது.
மாணவனின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள், மாணவனின் மரணம் சந்தேகத்திற்கிடமானது எனக் கூறினர்.
இந்த நிலையில், அதிமுக, தமி.வே.க, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டன. இதையடுத்து, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மாணவனின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தெளிவாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.