பி.ஏ.பி. பாசனத் திட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை திருமூர்த்தி அணையில் மத்திய ஜல்சக்தி துறை குழுவினர் நேரில் ஆய்வு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் விவசாய ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு (பி.ஏ.பி.) பாசனத் திட்டத்தின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ‘ஜல்சக்தி’ துறை அதிகாரிகள் குழுவினர் திருமூர்த்தி அணையில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இத்திட்டம் தொடங்கி சுமார் 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அணை மற்றும் கால்வாய் கட்டமைப்புகள் பலவீனமடைந்துள்ளதால், அவற்றை முழுமையாகப் புனரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், ஒட்டுமொத்தப் பாசனக் கட்டமைப்பையும் புதுப்பிக்க சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலிப்பதற்காகவே இக்குழுவினர் தற்போது நேரில் வருகை தந்துள்ளனர்.

மத்திய ஜல்சக்தி துறையைச் சேர்ந்த ரமேஷ், சென்னை மத்திய நீர் ஆணைய (Central Water Commission) இயக்குநர் அசோகன் மற்றும் அலுவலர்கள் ஆதித்யா, அஷ்ரப் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர், திருமூர்த்தி அணையின் நீர் இருப்பு, பிரதான மதகுகள் மற்றும் கால்வாய் அமைப்புகளைத் துல்லியமாக ஆய்வு செய்தனர். பி.ஏ.பி. திட்டத்தின் மூலம் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைப்பொழிவின் அடிப்படையில் நீர் விநியோகிக்கப்படும் ‘மண்டல பாசன முறை’ குறித்து முன்னாள் பாசன சங்கத் தலைவர் பரமசிவம் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார். குறைந்த நீர் ஆதாரத்தை வைத்து விவசாயத்தை எவ்வாறு நிலைநிறுத்துகிறார்கள் என்பதை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது விவசாயிகள் மற்றும் பாசன சங்கப் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கையில், “காண்டூர் கால்வாய் தொடங்கி, பிரதான மற்றும் பகிர்மானக் கால்வாய்கள் வரை பல இடங்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டு நீர் வீணாகிறது. மதகுகளில் உள்ள ஷட்டர்கள் துருப்பிடித்துப் பழுதடைந்துள்ளதால், தண்ணீரைத் துல்லியமாகச் சேமிக்கவோ அல்லது விநியோகிக்கவோ முடிவதில்லை. எனவே, 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்கி, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் மேலாண்மைக்கு வழிவகை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். மத்தியக் குழுவினர் தாங்கள் சேகரித்த தரவுகளை அறிக்கையாகச் சமர்ப்பித்த பிறகு, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version