அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு வருட காலமாக தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு வருட காலமாக தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு. மருத்துவமனை அருகே அம்மா உணவகம் அமைந்திருப்பதால் உணவு அருந்த வரும் ஏழை எளிய மக்கள் அவதி….

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், குத்தாலம் மற்றும் சுற்றுப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக 400க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு 500க்கும் மேற்பட்ட மகப்பேறு நடந்து வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் மருத்துவமனை முன்பகுதியில் உள்ள இடத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இதன்பின்பகுதியில் ஆஸ்பத்திரியில் உள்ள 7அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள கழிவுநீர் இரண்டு வருட காலமாக அம்மா உணவகத்தின் பின்புறும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி ஆஸ்பத்திரிக்கு வரும்நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஏழை எளிய மக்கள் பசிஆறுவதற்காக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் பின்புறம் தேங்கி நிற்கும் கழிவுநீரை பார்த்தாலே சாப்பிடக்கூடியவர்கள் மனவேதனை அடையும் சூழல் உள்ளது. கொசு, ஈக்கள் தொல்லை அதிகமானல் பொதுமக்களுக்கு நோய்தொற்றுதான் அதிகமாகும். இதன் அருகிலேயே உள்ள கட்டடத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை கட்டடமும் இயங்கி வருகிறது. மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் கழிவுநீர் தேங்காமல் முறையாக வெளியேற்றுவதற்கும், குப்பைகள், மருத்துவக்கழிவுகள் தேங்காமல் அன்றாடம் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து எடுப்பது கிடையாது. குப்பைகள் பிணவறைக்கு அருகே கொட்டப்பட்டு அதிக அளவில் சேர்ந்தபிறகுதான் அதுவும் அகற்றப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரி நுழைவுவாயில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version