திருச்சி: திருச்சியில் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைசெல்வன் என்பவர் டூவீலர் மெக்கானிக். இன்று காலை வேலைக்குச் செல்லும்போது, அவர் மீது மரணவெறியுடன் இருந்ததாக கூறப்படும் ஐந்து பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
பீமநகர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது, தாமரைசெல்வனை வழிமறித்த அந்த கும்பலைக் கண்டு, அவர் பயத்தில் அங்கு இருந்த சிறப்பு எஸ்ஐ செல்வராஜ் வீடு நோக்கி ஓடியுள்ளார்.
அவரை துரத்திச் சென்ற கும்பல், வீட்டுக்குள் புகுந்து தாமரைசெல்வனை சரமாரியாக வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டதையடுத்து, கொலையாளிகள் தப்பி ஓடினர். ஆனால் குடியிருப்பில் இருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்ற நான்கு பேர் தப்பியுள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் அரசு நிகழ்ச்சிக்காக தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த இடத்திலிருந்து வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
