108 வைணவத் திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா செல்வதன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகின்றனர். 5-ம் திருநாளான கடந்த 24-ம் தேதி, மிக முக்கியமான ஐந்து கருட சேவை நடைபெற அமைந்தது.
இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்தில், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களில் எழுந்தருளினர். பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.
7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு, சயன சேவை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இன்றைய திருவிழா முக்கியத்துவம்
திருவிழாவின் சிறப்பான நிகழ்வாக, 9-ம் திருநாளான இன்று (ஜூலை 28, திங்கட்கிழமை), அதிகாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை கடக லக்னத்தில், மேளதாளங்கள் முழங்க ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதனையடுத்து காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்று, அமைச்சர்கள் சாத்தார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோபாலா…” என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது வானில் கருடன் வட்டமடித்ததைக் கண்ட பக்தர்கள் பரவசத்துடன் பரமானந்த அனுபவம் பெற்றனர்.