பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள்: 892 கேமராக்கள், பைக் ஆம்புலன்ஸ் எனத் தயார்

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சிகரத் திருவிழாவான தைப்பூசத் திருவிழா, வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிவார்கள் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பக்தர்கள் வெளியூர்களில் இருந்து எளிதாக வந்து செல்ல ஏதுவாக, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கக் கோரித் தென்னக ரயில்வேக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். குறிப்பாக, கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, சாலையோர நடைபாதைகளில் மண்டியிருந்த முட்புதர்கள், குப்பைகள் மற்றும் கற்கள் முற்றிலும் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரப் பயணத்திற்காகத் தற்காலிக உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகளும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேரடியாகக் கண்காணிப்பார்கள் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, போர்க்கால அடிப்படையில் முதலுதவி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் அவசர உதவிக்குச் செல்லும் வகையில் 8 நவீன ‘பைக் ஆம்புலன்ஸ்கள்’ மற்றும் போதிய எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் உயிர்காக்கும் மருந்துகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியைப் பலப்படுத்தும் விதமாக, மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதை, முடி காணிக்கை மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கிரிவீதி உள்ளிட்ட அனைத்து முக்கியப் பகுதிகளிலும் மொத்தம் 892 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து மேற்கொள்ளும் இந்த ஏற்பாடுகள், தைப்பூசத் திருவிழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த உதவும் என ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version