வரவிருக்கும் சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், அய்யப்ப பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சகிப் நந்தட் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் இடையே சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு இரயில்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருத்தாச்சலம், விழுப்புரம், காட்பாடி, திருவண்ணாமலை, விருதுநகர், சிவகாசி, செங்கோட்டை உள்ளிட்ட பல நகரங்கள் வழியாகச் செல்வது, தென் மாநிலப் பக்தர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்தச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஹாசுர் சகிப் நந்தட் கொல்லம் சிறப்பு ரயிலானது (07111) வரும் 20, 27, டிச. 4, 11, 18, 25, ஜன. 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் (வியாழக்கிழமைகளில்), கொல்லம் – ஹாசுா் சகிப் நந்தட் சிறப்பு ரயிலானது (07112) வரும் 22, 29, நவ. 6, 13, 20, 27, ஜன. 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் (சனிக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் சிறப்பு இரயில்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள் வழியாகக் கேரளாவைச் சென்றடைகின்றன. தமிழகத்தில் இந்த இரயில் கடந்து செல்லும் முக்கிய இரயில் நிலையங்கள்: காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பின்னர் இரயில் கேரளாவில் உள்ள புனலூர் வழியாகப் பயணித்துக் கொல்லம் இரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடரலாம்.
சபரிமலை யாத்திரை சீசனுக்குப் புறப்படும் பக்தர்கள், இந்தச் சிறப்பு இரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பயணத் தேதிகளை முன்கூட்டியே உறுதிசெய்து தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறும் இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது பக்தர்களின் நெரிசலைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் எளிதான யாத்திரைக்கு வழிவகுக்கும்.

















