உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகராட்சியின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது, கோழி கழிவுகள் கொட்டப்படுவதாக கூறி, கோழி கடையை சீல் வைத்துவிட்டு, சாயங்காலம் சென்று மாமுல் பெற்று மீண்டும் கடையை திறக்கின்றனர், கூட்டத்தில், திமுக நகர்மன்ற தலைவரை பார்த்து, திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டி பேசியதால் பரபரப்பு :-
ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நகராட்சிகள் மற்றும் கிராம சபைகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு தீர்மானங்களை இயற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மயிலாடுதுறை நகராட்சியில் சிறப்பு கூட்டம், நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் மற்றும் , அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்தும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து இது தொடர்பான சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசும் பொழுது, திருடனையே காவலுக்கு வைப்பதால், நகராட்சி கட்டிடத்தில் ஜன்னலை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர் என்று கவுன்சிலர் ஒருவர் குற்றம் சாட்டினார், 26 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் கார்த்தி பேசும்பொழுது, கோழி கழிவுகள் பொது வெளியில் கொட்டப்படுவதாக தெரிவித்து, காலையில் நகராட்சி ஊழியர்கள் கோழி கடையை மூடுகின்றனர். ஆனால் மாலை நேரத்தில் கோழிக்கறியை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, மீண்டும் கடையை திறந்து விடுகின்றனர், என்று குற்றம் சாட்டி பேசினார். திமுக பெரும்பான்மையாக உள்ள நகரமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டி பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
