தமிழக அரசின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நேற்று திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. செவன் டாலர்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சபாநாயகர் அப்பாவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழகம் வளரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக அரசுக்கு அனைத்து விதத்திலும் நெருக்கடி கொடுக்க முயல்கிறது,” என குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹2,152 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், மக்கள் நலனுக்காக தமிழக அரசு தனது நிதியிலிருந்தே கல்வி துறையில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “விண்வெளியில் முதலில் கால் வைத்தவர் அனுமன்” என்று தெரிவித்தது, பா.ஜ.க, மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தைக் காட்டும் பிற்போக்கு சிந்தனை.
பா.ஜ.க, கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என்பதை யாரும் பேசுவதில்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் திருவாரூரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் கவர்னரிடம் ஒப்புதல் இல்லாமல் கிடப்பில் உள்ளன.
தமிழகத்திற்கு 3 சதவீதத்தை மீறி கடன் பெற அனுமதி கோரி அனுப்பிய நிதி மசோதா நிலுவையில் இருக்கிறது. ஆனால், உ.பி., ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை தோல்வியே காரணம் எனவும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார்.