‘அவரும் நானும்’ இரண்டாம் பாக நூல் வெளியீட்டு விழா : சோனியா, பிரியங்கா பங்கேற்பு மறுப்பு !

சென்னை:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ என்ற வாழ்க்கைசார்ந்த நூலின் இரண்டாம் பாகம் நாளை (ஜூலை 19) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த நூலில், முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவரது சொந்த அனுபவங்கள், அவரது அரசியல் பயணத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் இன்றுவரை வெளிவராத சம்பவங்கள் போன்றவை ஆழமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் பாகம் 2018-ம் ஆண்டு வெளியானது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சோனியா உடல்நலக் காரணத்தால், பிரியங்கா ஏற்கனவே ஏற்கப்பட்ட நிகழ்ச்சி காரணமாக நிகழ்வில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தெலுங்கானா முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் வர முடியாதது உறுதியான நிலையில், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) செயல் தலைவர் சுப்ரியா சுலே மட்டும் இந்த விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றால், அது தேர்தல் பரப்புரையை துவக்குவது போல பரிதிக்கப்படும் என்ற கவலையுடன், கட்சி தலைமையிடம் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி சார்பில் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சிப் பங்கேற்பை கேட்டு டில்லி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றால், அந்த அழுத்தம் குறையக்கூடும் என்ற அரசியல் கணிப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version