பீஹாரில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்தார்.
ஜலேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மகன் 9-ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை. ஆனால், அவரை பீஹாரின் தலைவராக மாற்ற வேண்டும் என லாலு விரும்புகிறார். மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஓட்டளிக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “மதம், ஜாதி அடிப்படையில் வாக்கு போடக்கூடாது. தேர்தல் நேரத்தில் தலைவர்கள் பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்கள் சொந்த பணம் தான். ஆனால் ஓட்டளிக்கும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிலையில் வைத்து வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.
அதே நேரத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பீஹாரில் ஆட்சி செய்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் குறித்து குறிப்பிட்ட அவர், “இந்த இரண்டு தலைமைகள் மாநிலத்தை வறுமையிலிருந்து மீட்கவில்லை. மக்கள் பிரதமர் மோடிக்கும் அதிகாரம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை” என்றார்.
தான் எந்தக் கட்சிக்கும் வாக்கு கேட்கவில்லை என்றும், மக்கள் நலனுக்காக விரைவான தீர்வை தரத் தயாராக இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார்.