மயிலாடுதுறை அருகே கிராமவாசிகள் சிலர் தங்களை சமூக புறக்கணிப்பு செய்து, தான் நடத்தும் கடையில் பொருள்கள் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிப்பதாக பெண் தன் குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அருகே உள்ள மேலையூர் கிராமம் அய்யர் காலனியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் தனது கணவர் வெற்றிச்செல்வன் மற்றும் பிள்ளைகள், உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து, கிராமவாசிகள் சிலர் சமூக புறக்கணிப்பு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், இடப்பிரச்னை காரணமாக சம்பத், கண்ணன், ரவி ஆகிய மூவர் தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், தான் நடத்தும் பெட்டிக்கடையில் யாரும் பொருள்கள் வாங்கக் கூடாது என்றும் மீறி வாங்கினால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிப்போம் என்று ஊர் மக்களிடம் கூறி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகவும், தான் தலைவியாக உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் யாரையும் சேர விடாமல் தடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். மனுவை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், இதுகுறித்து, சீர்காழி டிஎஸ்பி உரிய விசாரணை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.















