தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வழக்கமான தேர்தல் அறிக்கைகளுக்கு மாற்றாக, இளைஞர்களின் தேவைகளையும் கனவுகளையும் மட்டுமே முன்னிறுத்தி “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை” (Youth Election Manifesto) ஒன்றை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு கோவையில் வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
நிகழ்வின் தொடக்கத்தில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஹபீப் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர், “இன்றைய இளைஞர்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் பார்க்கப்படக்கூடாது; அவர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அந்த நோக்கிலேயே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என அதன் பின்னணி குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து, சாலிடாரிட்டி தமிழ்நாடு தலைவர் முஹம்மது ரியாஸ் தலைமையில், மாநிலச் செயலாளர்கள் ஜாபர் சாதிக், ஹபீப் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் இணைந்து அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முஹம்மது ரியாஸ், “தமிழகத்திலேயே முதல் முறையாக இளைஞர்களை மட்டுமே மையப்படுத்தி இத்தகையதொரு அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. இது ஏதோ ஒரு அறையில் அமர்ந்து எழுதப்பட்டதல்ல; தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள இளைஞர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தும், கல்வி, வேலைவாய்ப்பு, மனநலம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதித் துறை சார்ந்த வல்லுநர்களுடன் நீண்ட ஆலோசனைகள் நடத்தியும் செதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். குறிப்பாக, வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான திட்டங்கள், உயர்கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் மாவட்ட வாரியாக நிலவும் பிரத்யேக இளைஞர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் அறிக்கையில் கோவை மாவட்டத்திற்கான பிரத்யேகக் கோரிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் போது, இந்த இளைஞர் அறிக்கையில் உள்ள அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அமைப்பின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. இந்நிகழ்வில் சாலிடாரிட்டி செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது நாசர் புஹாரி, சபீர் அகமது, கோவை மாவட்டச் செயலாளர் ரியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இளைஞர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார உரிமைகளைத் தேர்தல் கால விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் இந்த முயற்சி, சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
















