போப்பல், மே 17 :
காஷ்மீரில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகமும் வீரமும் நாடுமுழுவதும் பாராட்டை பெற்றது.
இந்தநிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா, “ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் பிரதமர் மோடியின் காலடியில் விழுந்தன” என்று கூறியதாக ஒரு வீடியோவில் பேசும் பொருளாக பரவியுள்ளது.
சமூக ஊடகங்களில் சர்ச்சை
அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை பெருமைபடுத்தும் நோக்கத்தில் ராணுவத்தையும், மக்களையும் மிகைப்படுத்திப் பேசுவது சரியல்ல எனும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனை கடுமையாக கண்டித்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ், “இது ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கீழ்ப்படுத்தும் வகையிலான பேச்சு. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
துணை முதலமைச்சரின் விளக்கம்
சர்ச்சையை தொடர்ந்து விளக்கம் அளித்த ஜகதீஷ் தேவ்தா, “எனது பேச்சை காங்கிரஸ் கட்சி தவறாக உருவாக்கி வெளியிட்டுள்ளது. ராணுவத்தின் சேவையை புகழ்ந்ததையே நான் குறிப்பிட்டேன். இந்திய மக்கள், ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு பணிந்து வணங்குகிறார்கள் என்பதே என் கருத்து. என் வார்த்தைகளை தவறாக சித்தரித்ததற்கு காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.