திண்டுக்கல்லில் மின்கம்பங்களில் அத்துமீறும் விளம்பரப் பலகைகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதிகளான நத்தம் ரோடு மற்றும் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பகுதிகளில் விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், விபத்து அபாயமும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் ரோடு, பொன்னகரம் பகுதிகளில் சாலையோரங்களில் நிழல் தரும் பசுமையான மரங்களை விளம்பர நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காகப் பாழ்படுத்தி வருகின்றன. உயிருள்ள மரங்களில் இரும்பு ஆணிகளை அடித்து, அதில் வணிக ரீதியிலான விளம்பரப் பலகைகளைத் தொங்கவிடுகின்றனர். மரங்களின் திசுக்களைச் சிதைக்கும் வகையில் ஆங்காங்கே ஆணிகளை அடிப்பதன் மூலம், மரங்களுக்குச் செல்லும் நீர் மற்றும் சத்துக்கள் தடைபட்டு, காலப்போக்கில் மரம் பட்டுப்போகும் அபாயம் உள்ளது. பசுமைப் போர்வையைப் பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இத்தகைய செயல்கள் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

மரங்கள் மட்டுமன்றி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தாடிக்கொம்பு ரோட்டில் மின்கம்பங்களும் விளம்பரப் பலகைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. உயர் மின்னழுத்தக் கம்பிகள் செல்லும் மின்கம்பங்களில் விளம்பரப் பலகைகளைக் கட்டுவது சட்டப்படி குற்றமாகும். மின்கம்பிகளில் ஏற்படும் கசிவு அல்லது காற்றின் வேகத்தால் விளம்பரப் பலகைகள் சரிந்து விழும்போது, மின் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆபத்து நிறைந்த பகுதி என்று தெரிந்தும், விளம்பர நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை மின்கம்பிகளில் அமைப்பதைக் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றன. இது பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மற்றும் மின்கம்பங்களில் விளம்பரங்களைக் கட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, நகரின் அழகையும் பாதுகாப்பையும் கெடுக்கும் இத்தகைய அத்துமீறல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version