சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ், திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும், நாளுக்கு நாள் விஜய்க்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தவெகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக கூறப்படும் விமர்சனத்துக்கும் அவர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அருண்ராஜ், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் மாநிலத்தில் நிலவுகிறது. திமுக சமூக நீதி கட்சி என சொன்னாலும், அது அவர்களுக்கு மிகப்பெரிய வார்த்தை. அடிப்படை நீதிக்கே பாதுகாப்பு இல்லை. கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை, திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த வெட்டுக்கொலை, ராஜபாளையம் கோவிலில் நடந்த கொலை போன்ற சம்பவங்கள் இதற்குச் சாட்சியம்,” எனக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: “திமுக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் மகள்களை வெளியே அனுப்புவதற்கே தயங்குகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வெறும் சினிமா டயலாக்கள் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது அவர்களுக்கே தெரியும்,” என்றார்.
“இதே வேளையில், தவெகவிற்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்தான் சிலர் நிலை தடுமாறி எங்களை குறைத்து பேசுகிறார்கள்,” எனவும் அருண்ராஜ் குறிப்பிட்டார்.
காங்கிரசுடன் கூட்டணி குறித்து எழுந்த கேள்விக்கு அவர், “கூட்டணியைக் குறித்து எங்கள் நிலைப்பாட்டை முதல் மாநாட்டிலேயே அறிவித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி தொடர்பான முடிவை எடுக்க தலைவர் விஜய்க்கே அதிகாரம் உண்டு. திமுக மற்றும் பாஜக தவிர எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு வருபவர்களை வரவேற்போம்,” என்றார்.
தவெகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதிலளித்த அருண்ராஜ், “எங்கள் கட்சியில் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் இல்லை. இது ஒரு கற்பனை. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெகவை முடக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள்; ஆனால் அது முடியவில்லை. மக்கள் விஜய் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் தான் திமுக தலைவர்கள் பதட்டத்தில் எங்களை குறித்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர்,” என தெரிவித்தார்.
மேலும், “விஜய் விரைவில் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என அவர் கூறினார்.
