கோவை :
“கல்வி விழா என்ற பெயரில் திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் வெறும் நாடகமே. சினிமா பிரபலங்களை அரசியல் பேச்சுகளுக்கு பயன்படுத்தி விளம்பரம் செய்கிறது,” என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனை பேச்சாளராக மேடைக்கு அழைத்ததை எடுத்துக்கூறினார். “இது மக்கள் கவனத்தை திருப்பும் முயற்சி. விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு போட்டியாக, சிவகார்த்திகேயனை திமுகவினர் திட்டமிட்டு முன்னிறுத்துகிறார்கள்,” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், கல்வித் துறையின் உண்மையான பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய அவர், “அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மாணவர்கள் மரத்தடியில் கூட பாடம் படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இப்படியிருக்க, தங்களை ‘கல்வியில் சிறந்த அரசு’ என்று காட்டிக் கொள்வது மக்கள் ஏமாற்றமே” என்றார்.
அதே நேரத்தில், வடமாநில பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் கருத்துகளை அவர் கண்டித்தார். “பெண்களுக்கு இந்திய வரலாற்றில் தனிச் சிறப்பான இடம் உண்டு. வட, தெற்கு எனப் பிரித்து பேசுவது தவறு. பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசாங்க திட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன,” என்று கூறினார்.
சாலை விபத்துகள் குறித்து பேசும்போது, “தமிழகம் அதிகளவில் விபத்து உயிரிழப்புகள் நிகழும் மாநிலமாக உள்ளது. முதல்வர் அறிவிக்கும் திட்டங்கள் மேடையில் மட்டுமே பிரகாசிக்கின்றன, நடைமுறையில் பல குறைகள் இருக்கின்றன,” என்றார்.
கோவில்பாளையத்தில் மாணவனை காப்பாளர் தாக்கிய சம்பவத்தையும் கண்டித்த அவர், “ஆதரவற்ற குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகுவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் கூறினேன்,” என்று தெரிவித்தார்.















