கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலை குறைகூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய முகமூடி அணிந்த நபரை தனிப்படை போலீசார் இன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக கோவிலை அவதூறாக பேசும் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், முகமூடி அணிந்து, யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து, “கோவில் அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு புதைக்கப்படுகிறார்கள்” என்கிற அதிர்ச்சியூட்டும் பொய்ப்புகார்களை கூறினார். இதன் பேரில் போலீசிலும் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அரசு, இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு (SIT) ஒப்படைத்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், பக்தர்கள், அரசியல் கட்சிகள், அரசு என அனைவரும் ஒருமித்துக் கொண்டு, இது கோவிலை களங்கப்படுத்தும் நோக்கத்திலான பொய்ப்புகார் மட்டுமே என்று தெரிவித்தனர்.
கிடுக்கிப்பிடி விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த சிலர் அவரை தூண்டியதின் பேரில் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதன் அடிப்படையில், இன்று (ஆகஸ்ட் 23) அந்த முகமூடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவரை தூண்டியவர்கள் யார், கோவில் புகழை கெடுக்கும் சதிக்கு பின்னால் உள்ள சக்திகள் யார் என்ற விவரங்களை SIT போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் பொய்ப்புகார் அளித்த நபருக்கும், தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பு உள்ளதாக, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார். இதனால், கோவிலை களங்கப்படுத்தும் அரசியல் சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.