எஸ்ஐஆர் அழுத்தம் : கேரளைக்கு பின் ராஜஸ்தானிலும் உயிரிழப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) பல மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய பணிச்சுமை அரசு ஊழியர்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், கேரளாவில் ஒரு அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவத்துக்கு அடுத்தடுத்து, ராஜஸ்தானிலும் அதே காரணத்தால் இன்னொருவர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்த 45 வயதான முகேஷ் ஜன்கித், ஞாயிற்றுக்கிழமை பிண்டயகா ரயில்வே கிராஸிங்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்துக்குப் பிறகு, முகேஷின் சகோதரர் அவரது எழுத்துக்கடிதத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் தன்னை ஈடுபடுத்தியிருந்த மேலதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததை, பணி நீக்கம் செய்வதாக மிரட்டப்பட்டதை முகேஷ் குறிப்பிட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதுவே அவரது உயிரிழப்புக்கான முக்கிய காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கு முன்னர், கேரளாவில் எஸ்ஐஆர் பணிச்சுமையைத் தாங்க முடியாமல் அரசு ஊழியர் அனீஸ் ஜார்ஜ் தற்கொலை செய்திருந்தார். இரண்டு மாநிலங்களில் தொடர்ந்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், எஸ்ஐஆர் பணிகளில் உள்ள அழுத்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் போது சுமார் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் ஆசிரியர்கள் உட்பட பல துறைகளின் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது, பணிச்சுமையை பெரிதும் அதிகரித்துள்ளதாக சங்கங்கள் கூறுகின்றன. இதனால் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Exit mobile version