அலகாபாத் : சீக்கியர் தலைப்பாகை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கில், அவர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், “இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகிறாரா, குருத்வாராவுக்கு செல்ல முடியிறாரா என்பதற்காக போராட்டம் நடக்கிறது. இது சீக்கியர்களுக்கே அல்ல, அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்” எனக் குறிப்பிட்டார்.
அந்த உரை தொடர்பாக வாரணாசி எம்பி, எம்எல்ஏ வழக்குகள் விசாரணைக்கு உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அந்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து நாகேஸ்வர் மிஸ்ரா என்பவர், வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதன் பேரில், கடந்த ஜூலை 21ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 3ஆம் தேதி அனைத்து தரப்புகளின் வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ராகுல் தொடர்ந்த மனுவை அலகாபாத் ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால், வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என சட்டவியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
