இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில், தன்னம்பிக்கையுடன் பாட்டிங் செய்து இரட்டை சதமடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி, WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டதால், வெற்றிக்கான கட்டாய சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி 87 ரன்கள் எடுத்தார். ஆனால் கே.எல்.ராகுல் (2), கருண் நாயர் (31), ரிஷப் பண்ட் (25) போன்ற முக்கிய வீரர்கள் சீக்கிரமே வெளியேறினர்.
அப்போது களத்தில் இருந்த சுப்மன் கில், அழுத்தமான சூழ்நிலையில் முழு பொறுப்பையும் சுமந்து ஜடேஜாவுடன் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜடேஜா 89 ரன்களில் வெளியேறியபோதும், சுப்மன் கில் தன்னம்பிக்கையுடன் ஆடி 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 251 ரன்களை கடந்தார்.

இந்த சாதனையின் மூலம் :
SENA நாடுகளில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டனாகவும், இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டனாகவும், விராட் கோலிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் சதமடித்த இரண்டாவது இந்திய கேப்டனாகவும், 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதமடிக்கும் இந்திய வீரராகவும் சுப்மன் கில் புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.
133 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்துள்ளது. கில் 251 ரன்களுடன் ஜெட் போல களத்தில் நிற்க, வாஷிங்டன் சுந்தர் 31 ரன்களுடன் அவருக்கு துணையாக உள்ளார்.
இந்த தொடரின் திருப்புமுனையாக இந்த போட்டி அமையுமா ? சுப்மன் கிலின் அபார ஆட்டம் இந்தியாவுக்கு ஆறுதலாகுமா என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.