ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் காயமடைந்த இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது சிட்னி மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிட்னியில் நடைபெற்ற போட்டியில், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க முயன்றபோது, ஷ்ரேயாஸ் ஐயர் விலா எலும்பில் கடுமையான தாக்கம் ஏற்பட்டு காயமடைந்தார். காயத்தால் ஏற்பட்ட உள் இரத்தப்போக்கு காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “ஐயரின் நிலை தற்போது ஸ்திரமாக இருந்தாலும், விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 2 முதல் 5 நாட்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்” என கூறியுள்ளனர்.
முதலில், அவர் மூன்று வாரங்கள் வரை மைதானத்துக்கு அப்பால் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குணமடையும் காலம் அதைவிட நீளக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என இழந்தது. சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த கூட்டாண்மையால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தற்போது டி20 தொடரை கைப்பற்றுவதற்கான தீவிர தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
















