திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தால் முழு தமிழகம் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், நாளுக்கு நாள் வெளியே வரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில், “அஜித் குமாரின் மரணத்தில் உண்டான சிக்கல்கள், காவல்துறையின் தனிப்படை நடவடிக்கைகள் மற்றும் சில முக்கியமான அரசியல் தொடர்புகள் தொடர்பான தகவல்கள் பதிலளிக்கப்படாமல் உள்ளன” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் 3 கேள்விகள் :
இதற்கிடையே, ஏற்கனவே எழுப்பிய 9 கேள்விகளுடன் கூடுதலாக பா.ஜ., சார்பில் மேலும் 3 முக்கியமான கேள்விகளை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார் :
அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா – திமுக தொடர்பா?
2011-ஆம் ஆண்டு நிகிதா மீது, அன்றைய துணை முதல்வர் ஸ்டாலினின் நேரடி உதவியாளரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சம்பந்தம் காரணமாகவே தனிப்படை அமைத்து அஜித் குமாரை விசாரிக்க திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா?
சாட்சியாக உள்ள சக்தீஸ்வரனுக்கு அச்சுறுத்தல் யார் தரப்பில்?
அஜித் குமாரை துன்புறுத்துவதை காணொளியாகப் பதிவு செய்த சக்தீஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதம் சிந்திக்க வைக்கும். அவரை அச்சுறுத்துபவர்கள் யார்?
தனிப்படை அமைக்க அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்?
எப்.ஐ.ஆர்., இல்லாத நிலையிலும் விசாரணை நடத்த அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரியின் விவரம் இதுவரை அரசு வெளியிடாததன் பின்னணி என்ன?
நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையின் இறுதியில், “இவ்வாறு பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருக்கும் போதே, வெறும் ஆறுதல் வார்த்தைகளும், இழப்பீடு அறிவிப்புகளும் உண்மையை புதைக்க முயற்சியாக போவதல்லவா?” என்றார்.