சீர்காழி அருகே நிம்மேலியில்( நிம்மதியூர்) சனி பெயர்ச்சி விழா- திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருமே நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.சனி பகவான் தனக்கு ஏற்பட்ட குஷ்யோகம் என்ற நோய் நீங்க வேண்டி இத்தலத்தில் சிவபெருமானை பூஜித்து கோவில் எதிரே உள்ள தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கி நிம்மதியுற்றதால் இந்த ஊர் நிம்மதியூர் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் நிம்மேலி என்று அழைக்கப்படுகிறது. இதனால் இத்தலத்தில் எள் தீபமேற்றி, எள் அன்னம் தானம் செய்து தன்னை பூஜிப்பவர்கள் மற்றும் பரிகாரம் செய்யும் பக்தர்களுக்கு பெயர்ச்சி காலங்களில் ஏற்படக்கூடிய சகல பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய கிரகதிபதியாக சனி பகவான் திகழ்கிறார். இத்தகைய சிறப்புடைய கோவிலில் இன்று சனி பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இன்று பரிகார ஹோமம் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு சிவபெருமான் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஜபம் நடந்தது. 8.24 மணிக்கு சனிப்பெயர்ச்சி மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் எள் தீபம் ஏற்றி, அர்ச்சனைகள் செய்து சிவபெருமானையும் சனீஸ்வர பகவானையும் தரிசனம் செய்தனர்.















