திருச்சி : முக்கொம்பு அணை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
2023 அக்டோபர் 4ஆம் தேதி, திருச்சி ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், திருவெறும்பூர் ரோந்து போலீஸ்காரர் சங்கர் ராஜபாண்டியன் மற்றும் ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகியோர், சாதாரண உடையில் காரில் முக்கொம்பு அணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு மது அருந்திய நிலையில், இரண்டு காதல் ஜோடிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் துவாக்குடியை சேர்ந்த 19 வயது இளைஞரை மிரட்டி தாக்கினர். பின்னர், இளைஞரை அனுப்பிவைத்து, சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி உடனே காதலனுடன் சேர்ந்து முக்கொம்பு புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்தார்.
தொடர்ந்த விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒழுங்கு விதிகளின் படி அவர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜீயபுரம் மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.