தலைநகர் டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீசாரதா இந்திய மேலாண்மை நிறுவனம் இயக்குநர் சாமியார் சைதன்யானந்தா மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
அந்நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமோ பயிலும் 17 மாணவிகள் மீது அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சாமியாரை தேடி காவல்துறையினர் வலைவீசி வருகின்றனர்.
மேலும், விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி மாணவிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்ததாகவும், இரவு நேரங்களில் தனது அறைக்கு வரும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவைச் சேர்ந்த மாணவியை சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அவரது அறையில் ஒருவரை கிழிந்த உடையுடன் நிற்க வைத்ததாகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், பெண் பணியாளர்கள் மூலமாகவும் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சாமியாரின் விருப்பத்துக்கு இணங்காதவர்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து இதுவரை சாமியாரின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.