சிறுமிக்கு பாலியல் தொல்லை : தலைமை காவலர் கைது – தாயும் உடந்தை என அதிர்ச்சி !

நெல்லை மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சசிகுமார், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவர். அழகிய மண்டபத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், திருநெல்வேலியில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். ஜெபக்கூட்டத்தில் சந்தித்த இவருக்கும் சசிகுமாருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நட்பு நீடித்து, சசிகுமார் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகளாகக் கருத வேண்டிய சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அத்துமீறலால், மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். பள்ளியில் அமைதியாகவும் சோர்வாகவும் இருந்த அவரை கவனித்த ஆசிரியர், தனிப்பட்ட முறையில் பேசுகையில், சிறுமி கண்ணீருடன் நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தினார்.

அதிக அதிர்ச்சியளித்தது, தாயே இந்தச் சம்பவத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தது. இதையடுத்து, தலைமையாசிரியை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது. குழந்தைகள் நல அலுவலர் தினேஷ், மாணவியிடம் விசாரணை நடத்தி, பாலியல் அத்துமீறல்கள் உறுதி செய்யப்பட்டன.

சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகுமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவரை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர்படுத்திய போலீசார், வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு பெற்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர் ஒருவரே இவ்வாறு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், தாயே உடந்தையாக இருந்ததும், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version