திருவள்ளூரில் 10 வயது சிறுமி ஒருவருக்கு மர்ம நபர் பாலியல் வன்கொடுமை மேற்கொண்ட சம்பவம் மாநிலமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் தேதி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தூக்கிச் செல்லப்பட்டு, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது
இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், சம்பவம் நடந்தே 7 நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்ய முடியாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“இன்னும் இரண்டு நாட்கள் வேண்டும்” – போலீசாரின் பதிலடி!
பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் கூறுவதாவது, “ஒவ்வொரு நாளும் போலீசார் வந்து, இன்னும் 2 நாட்கள் அவகாசம் தேவை என்பதையே கூறுகிறார்கள். செல்போன் திருடப்படினால் கூட உடனடியாக கைது செய்கிற காவல் துறை, இத்தனை நாட்கள் ஆகியும் குற்றவாளியை பிடிக்காமல் காலதாமதம் செய்கின்றது” எனக் குற்றம் சாட்டினர். மேலும், தக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடில் போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“முதல்வர் பேச மாட்டார்; சாரி சொல்லிவிட்டு போவார்!” – அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
“திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தே 7 நாட்கள் ஆனது. ஆனால் இதுவரை யாரும் சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் இதுபற்றிப் பேசவும் மாட்டார். ‘சாரி’ என்று சொன்னுவிட்டு போய்விடுவார்.
திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையாக குலைந்துள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதற்கான திட சான்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளது” எனக் கூறினார்.