திண்டுக்கல்லில் வெறிச்சோடிய மாடு முட்டி 7 பேர் காயம்: மாணவர்களுக்குப் படுகாயம்

திண்டுக்கல் பேட்டை ரோடு பகுதியில் இன்று காலை முதல் சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று பொதுமக்களைத் தாக்கியதில், இரண்டு மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேட்டை ரோடு ஆட்டு இறைச்சி அருவைக்கூடம் அருகே இன்று அதிகாலை முதலே ஒரு மாடு அப்பகுதியாகச் செல்பவர்களைத் துரத்தித் துரத்தி முட்டியுள்ளது. இதில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் என மொத்தம் 7 நபர்கள் மாடு முட்டி கீழே தள்ளப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் சிக்கிய பெண் ஒருவருக்குக் கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மற்ற 6 பேரும் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே சுற்றித் திரியும் மாடுகளால் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் சாலையில் மாடுகளைத் தடையின்றி நடமாட விடும் உரிமையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், சாலையில் திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் பேட்டை ரோடு பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட மாட்டைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version