தருமபுரி பொதுமக்கள் வசதிக்காக 7 புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் 7 புதிய நியாயவிலைக் கடைகள் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. இதற்கான தொடக்க விழா பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட புலிக்கரை மற்றும் ஜாகீர் வரகூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமை தாங்கி, புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து வைத்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்த இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் தற்போது கூட்டுறவுத் துறையின் கீழ் 1,057 கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 44 கடைகளும் என மொத்தம் 1,101 நியாயவிலைக் கடைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4,75,621 குடும்ப அட்டைகளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, கிராமப்புறங்களின் உட்பகுதிகளில் புதிய கடைகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன் அடிப்படையில், இன்று ஜாகீர் வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய 5 இடங்களில் பகுதி நேரக் கடைகளும், கொல்லப்பட்டி மற்றும் ஜோதிஅள்ளி பகுதிகளில் 2 முழுநேர நியாயவிலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடைகளின் செயல்பாட்டு நேரங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜாகீர் வரகூர், இருளப்பட்டி மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதிகளில் உள்ள பகுதி நேரக் கடைகள் சனிக்கிழமைகளிலும், தாசனம்பட்டியில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஜெடையன்கொட்டாயில் புதன்கிழமைகளிலும் செயல்படும். அதேபோல், கொல்லப்பட்டி முழுநேரக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஜோதிஅள்ளி முழுநேரக் கடை வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு முதல் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 26 முழுநேர மற்றும் 32 பகுதி நேரக் கடைகள் என மொத்தம் 58 புதிய கடைகள் தொடங்கப்பட்டு, பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.த. சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் ப.சுந்தரம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். “மக்களின் இருப்பிடத்திற்கே சேவை” என்ற அரசின் உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நியாயவிலைக் கடைகள், குறிப்பாக முதியோர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version