கரூர் கூட்ட நெரிசல் : “செந்தில் பாலாஜி சதியே காரணம்” – தவெக தரப்பின் பரபரப்பு குற்றச்சாட்டு

கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுற்றி பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணைக்காக மனு தாக்கல் செய்ய முயன்ற தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன், “இந்த நிகழ்வின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. குறிப்பாக, திமுகவின் மூத்த தலைவர் செந்தில் பாலாஜியின் சதி வலையால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “விஜய் செந்தில் பாலாஜி குறித்து பேசிய பிறகு, அவரை நோக்கிச் செருப்பு வீசப்பட்டது. அதுவும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்றார்.

அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்தும் அவர் பல கேள்விகளை எழுப்பினார். “அனுமதி கடைசி நேரத்தில் வழங்கப்பட்டது, சம்பவ இடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது, உடற்கூறு ஆய்வு இரவோடு இரவாக நடத்தப்பட்டதற்கு காரணம் என்ன?” என்று சந்தேகம் வெளியிட்டார்.

அதேபோல், “காவல்துறை தவறான தகவலை பரப்புகிறது. குடிநீர், உணவு வசதி எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. உண்மையில், மரம் இடிந்து விழுந்ததால் பெரும்பாலானோர் உயிரிழந்தனர்” என்றும் அறிவழகன் விளக்கமளித்தார்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், உடற்கூறு அறிக்கைகள் வெளிவந்த பிறகு தான் உண்மைகள் தெளிவாகும் என்றும் அவர் கூறினார்.

மதுரை கிளை பதிவாளர் இன்று மனு ஏற்க மறுத்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி மீண்டும் பொது நல மனு தாக்கல் செய்யப்படும் என்று தவெக தரப்பு அறிவித்துள்ளது.

Exit mobile version