சென்னை :
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்தார்.
முதலில் தனது பயணத்தைப் பற்றிப் பேசுகையில், “இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும், நாங்கள் மவுனப் புரட்சி செய்து தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருகிறோம். முதலீடுகளைத் தாண்டியும் நல்லுறவை உருவாக்கிய பயணமாக இது அமைந்துள்ளது” என்று கூறினார்.
அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த அவர், “நாங்கள் சுயமரியாதைக் கொள்கையில் நம்பிக்கை வைத்து தான் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை நோக்கி, “ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும்போது, இப்படி அக்கப்போரான கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்?” என கூறினார்.
 
			















