ஈரோடு:
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று ஈரோட்டில் பொதுமக்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது பேச்சின்போது ஏற்பட்ட ஒரு சிறிய தடுமாற்றம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேடையில் உரையாற்ற தொடங்கிய செங்கோட்டையன், விஜயை பற்றி பேசும் போது “புரட்சி த…” என ஆரம்பித்து, சில நொடிகள் தயக்கம் காட்டினார். உடனே சுதாரித்துக் கொண்டு “புரட்சி தளபதி” என தனது உரையைத் தொடர்ந்தார். இந்த தருணம் கூட்டத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிமுகவில் நீண்ட காலம் செயல்பட்டவர் என்பதால், ‘புரட்சித் தலைவர்’, ‘புரட்சித் தலைவி’ போன்ற சொற்களை பயன்படுத்தி பேசும் பழக்கம் செங்கோட்டையனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பழக்க தோஷத்தால் தான் அவர் பேச்சின் போது தடுமாறியிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் ‘தளபதி’ அல்லது ‘இளைய தளபதி’ என்றே அழைப்பார்கள். ‘புரட்சி தளபதி’ என்ற அடைமொழி நடிகர் விஷாலுக்கு வழங்கப்பட்ட பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் செங்கோட்டையனின் பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் விவாதங்களிலும் பேசப்பட்டு வருகிறது.
இன்றைய ஈரோடு மக்கள் சந்திப்பு, செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு நடைபெறும் முதல் பொதுநிகழ்ச்சி என்பதாலும், கரூர் சம்பவத்திற்கு பின்னர் விஜய் பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பு என்பதாலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் முன்னின்று மேற்கொண்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு வந்த விஜயை வரவேற்ற செங்கோட்டையன், பின்னர் விஜயின் பிரச்சார வாகனத்தில் ஏறி மக்களிடம் உரையாற்றினார். பொதுவெளியில் அவர் பேசிய முதல் நிகழ்ச்சி இதுவாகும். உரையின்போது அவர் அணிந்திருந்த சட்டையில், ஜெயலலிதாவின் படத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது.
உரையில் செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணிற்கு தலைவர் விஜய் வந்துள்ளார். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நாளை தமிழகத்தை ஆள வேண்டிய தலைவராக விஜயை மக்கள் பார்க்கிறார்கள்” என பேசினார். மேலும், வருங்கால அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டும் வகையில் அவர் பேசிய கருத்துகள் கூட்டத்தில் பலத்த வரவேற்பை பெற்றன.

















