அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, “அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசினேன்” எனக் கூறியிருந்தார். இந்தச் சந்திப்பு அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தைப் பற்றி இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுகவில் பொறுப்பில் இல்லாதவரை எந்த துணிச்சலில் பாஜக தலைவர்கள் சந்திக்கிறார்கள்? செங்கோட்டையன் பின்னால் பாஜக இருக்கிறது என்பதை அவர் சந்திப்பு உறுதி செய்கிறது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் மேலும்,
“அதிமுகவை கூட்டணியில் வைத்துக்கொண்டே கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். அதிமுக தொண்டர்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்தது எத்தகைய சிக்னல் கொடுக்கிறது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் நீடித்தால் அதற்கான பதிலை தொண்டர்களே சொல்லுவார்கள்” எனத் தெரிவித்தார்.
விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கருத்து
விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
“ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அது ஏற்புடையதல்ல. எனினும், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அதைத் தெரிந்த பின் உரிய பதில் தருவேன்” என்றார்.
விசிக சுற்றுப்பயணம் எப்போது?
விசிக சுற்றுப்பயணம் எப்போது தொடங்கும் எனக் கேட்கப்பட்டதற்கு அவர்,
“தற்போது கட்சியின் மறுசீரமைப்பில் கவனம் செலுத்துகிறோம். 22 ஆயிரம் பேர் பொறுப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். 234 தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் பின்னர்தான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் இப்போது சுற்றுப்பயணம் ஆரம்பித்தாலும், உடனடியாக களத்தில் இறங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.

















