கோபிசெட்டிபாளையம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுடன், கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
அதிமுக தலைமையின் மீது நீண்டநாள் அதிருப்தி கொண்டிருந்த செங்கோட்டையன், நேற்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவிக்கு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இந்த ராஜினாமாவின் பின்னணி, அவர் தவெகவில் இணையவிருப்பதாகவே அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் திமுகவிலும் இணைய வாய்ப்பு இருப்பதாக சில வட்டாரங்களில் செய்திகள் பரவின. இதற்கு காரணமாக, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சேகர்பாபுவை அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
விஜயுடன் 2 மணிநேர ஆலோசனை
இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செங்கோட்டையன் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்திற்கு சென்று அவருடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக அணிகளின் ஒருங்கிணைப்பாளர் பதவி, மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு பொறுப்புகள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பிற்கு உற்சாக வரவேற்பு
இன்று காலை, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பேருந்தில் பனையூர் தவெக அலுவலகத்துக்கு வருகை தர, அங்கு கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பளித்தனர். பின்னர் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா அவரை கட்சி அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். முட்டுக்காடு அருகே தங்கியிருந்த செங்கோட்டையனை, ஆதவ் அர்ஜூனா நேரில் சென்று அழைத்துவரும் நிகழ்வும் கவனத்திற்கு வந்தது.
செய்தியாளர்களை விரைவில் சந்திக்கிறார்
தவெகவில் இணைந்ததையடுத்து, செங்கோட்டையன் விரைவில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் முடிவைப் பற்றி விளக்கமளிப்பார் என கூறப்படுகிறது.
















