அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு, சில மணி நேரங்களிலே இரண்டு முக்கிய பதவிகளை வழங்கி தவெக தலைவர் விஜய் பெரிய அதிரடி போட்டுள்ளார்.
செங்கோட்டையனுடன், முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் பல்வேறு முன்னாள் நிர்வாகிகளும் தவெகவில் இணைந்தனர். இவர்களின் இணைப்பு, கட்சியின் அடுத்த கட்ட அரசியல் கணக்குகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மாநில உயர்மட்ட குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
மாலை வெளியிட்ட அறிக்கையில், விஜய், தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இயங்கும் 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு செங்கோட்டையனை நியமித்துள்ளார். இப்பதவி, தவெக அமைப்பில் மிகவும் முக்கியமான தலைமைப் பொறுப்பாகப் பார்க்கப்படுகிறது.
4 மாவட்டங்களின் அமைப்பு பொறுப்பு கூடுதல்!
இதோடு மட்டுமல்லாமல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட மட்டத்தில் இருந்து உயர்மட்ட குழு வரை தொடர்ந்து பணியாற்றும் வகையில், இவருக்கு இரட்டை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதியவர்களுக்கு விஜயின் வரவேற்பு
செங்கோட்டையனுடன் வந்த சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை விஜய் தனியாக வாழ்த்தி வரவேற்றுள்ளார். புதிய உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கட்சித் தோழர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தி தவெக அடுத்த அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தப் போகிறது எனக் கட்சி வட்டாரங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டு வருகின்றன.
















