அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையை குறிவைத்து விமர்சனக் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே வார்த்தைப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் பரப்புரை நிகழ்ச்சியில் ஈபிஎஸ், செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு முழுமையான விசுவாசம் இல்லையென கூறி, அவரை ‘பிச்சைக்காரன் உடையுடன்’ ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வப்பெருந்தகை, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என இழிவுபடுத்துவது, தனிநபரை குறைசொல்வது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மரியாதையையும் பாதிக்கிறது.
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல; அது ஜனநாயகத்தின் அடித்தளம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பாதையில் பயணித்து, ஏழை மக்களின் வாக்கால் முதலமைச்சராக உயர்ந்தவர் ஈபிஎஸ். ஆனால் இன்று மக்களின் துயரங்களிலிருந்து தூரமாக நிற்கிறார்.
டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, சொகுசு கார் (Bentley) பயணிக்கும் ஒருவர், ஏழை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை எப்படி உணர முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், “என்னை ‘பிச்சைக்காரன்’ என்று அழைப்பது, எளிமையான சூழ்நிலைகளில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையை அவமதிப்பதாகும். நான் அணியும் எளிய உடையில் மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, எடப்பாடி பழனிசாமியின் கருத்து ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், அதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று சவாலாகக் கேட்டுள்ளார்.
 
			
















