“காமராஜரை தவிர தமிழகத்தில் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இல்லை” என தெரிவித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அப்படிப்பட்ட தலைவரை அவமதித்த பிறகு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதற்கான நீதியுணர்வு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் பதிலடி வழங்கியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் தொகுதி தொடர்பான பிரச்சனைகளை முதல்வர் மு.ஸ்டாலினிடம் மனுவாக வழங்கியதாகவும், சாலை சேதம் உள்ளிட்ட விவரங்களை எடுத்துக்காட்டியதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“காமராஜர் விவகாரம் நேற்று முற்றுப்புள்ளி பெற்று விட்டது. காங்கிரசைப் பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை? அவர் கட்சி – அதாவது பாஜக மற்றும் அதன் மூதாதையர்கள் – தான் பெருந்தலைவர் காமராஜரை புதுடில்லியில் வீட்டோடு வைத்து கொழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதைத்தான் இப்போது மறந்து, வாக்குகளுக்காக அவரை நினைவு கூறுகிறார்கள். இது வெறும் வேஷம். பாஜக, ஆர்எஸ்எஸ் வேஷங்களை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
மேலும், “தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் தயார்” என அண்ணாமலை கூறியதற்கும், “ஆடு நனைந்துவிட்டதாம், ஓநாய் அழுதது போல அவரது பேச்சு இருக்கிறது” என விமர்சித்தார்.