மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மதுரை கூடல் நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டாம் தளக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய அவர், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே முன்னுரிமை கொடுத்துத் திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கடுமையாகச் சாடினார். “மதுரை மக்களின் தாகம் தீர்க்க அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்றுள்ளன. தரமற்ற முறையிலும், காலதாமதமாகவும் பணிகள் நடந்ததால் தற்போது சோதனை ஓட்டத்தின் போதே குழாய்கள் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே வெடித்துச் சிதறுகின்றன. இதுவே இந்த அரசின் நிர்வாகத் திறமைக்குச் சான்று” என்று விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் தடையின்றி விற்கப்படுவதாகவும், இதனை ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள வைகோ அவர்களே சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், “அதிமுக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை; எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனித்துவமாகச் செயல்படுகிறது. டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்தது 125 நாட்களாக வேலை உறுதித் திட்டத்தை உயர்த்தித் தந்ததற்காகத் தெரிவிக்கப்பட்ட நன்றி மட்டுமே. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்துப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவை எடுப்பார். நடிகர் விஜய்யின் கட்சிப் பணிகளுக்கும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கும் அரசு நெருக்கடி கொடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்; பொங்கல் பரிசு ரூ.3,000 கொடுத்தாலும் சரி, கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு வந்தாலும் சரி, வரும் தேர்தலில் திமுக தோல்வியடைவது உறுதி” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசுகையில், “நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு மதிக்க வேண்டும். முருகப் பெருமானை விமர்சனம் செய்ததால் தான் முதலமைச்சரின் கார் டயர் சமீபத்தில் பஞ்சராகிப் போனதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அமித்ஷா போன்ற மாபெரும் தலைவர்கள் ஒரு திரைப்படத்திற்கு நெருக்கடி கொடுக்க மாட்டார்கள். எமனையே பார்த்தவர்கள் நாங்கள், யாருக்கும் எப்போதும் அடிபணிந்து போக மாட்டோம்” என்று தனது பாணியில் பதிலளித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
















