நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செப்டம்பர் 24க்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு, “திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினார்” எனும் குற்றச்சாட்டில், நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்ததை அடுத்து சீமானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில், 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த மார்ச் மாதம், இருதரப்பும் பேசி தீர்வுக்கு வருமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அடுத்த விசாரணை வரை சீமான் மீது உள்ள வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஆனால், “சமரசம் தேவையில்லை, நீதியே வேண்டும” என்று விஜயலட்சுமி தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், இன்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், செப்டம்பர் 24க்குள் சீமான் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், கைது தடைக்கு விதிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.