விஜய் மீது சீமான் கடும் விமர்சனம் : “10 நிமிஷம் பேச்சுக்கே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடமா ?”

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “விஜய் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி கேட்கிறார். அதற்காக சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ணி, நடித்து பார்த்து பேச வேண்டும் போல இருக்கிறது. அரசாங்க உரைக்கு கூட 5 நிமிடம் அளிக்கிறார்கள். ஆனால் நீ அரசியல் பேசுவதற்கு 10 நிமிடம் போதுமா?” என கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து, “காமராஜர் தான் கொள்கை தலைவர் என்றால், அவர் பற்றி 10 நிமிடம் பேசு. வேலு நாச்சியார் பற்றி பேசு. ஆனால் நீ பேசுவது தியேட்டரில் முதல் காட்சி கத்துவது மாதிரி தான். பிக்பாஸ் மாதிரி விஜய் வருகிறார் என்கிறார்கள். வேட்டைக்கு தான் வருகிறாராம். உண்மையில் நீ அரசியலை வேடிக்கையாக மாற்ற வருகிறாய்” என்று தாக்கினார்.

மேலும், “பாஜக உன் கொள்கை எதிரி என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லு. பாஜ, காங்கிரஸ், அதிமுக, திமுக – எல்லோரின் கொடிகள் மாறினாலும் கொள்கை மாறுவதில்லை. திமுகவுக்கு மாற்று மீண்டும் திமுக ஆக முடியாது. ஊழல், லஞ்சத்திற்கு மாற்று நேர்மையும் உண்மையும் தான் வேண்டும். தரமான கல்வி, உலகத் தரத்தில் மருத்துவ சேவை, ஏழை – பணக்காரன் பாராமல் அரசு வேலை – இதுவே என் கனவு” என சீமான் வலியுறுத்தினார்.

Exit mobile version