திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பணசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக இந்துக்களின் உரிமையை ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு பறிக்கிறது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் இந்துக்கள் சிறுபான்மையாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இங்குள்ள மண்டு கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்துக்கள் சார்பில் முயற்சி நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்குள்ள கிறிஸ்தவர்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி இதுவரை போலீசார் அனுமதி மறுத்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், இந்துக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை எனத் தெரிவித்து, தீபம் ஏற்ற அனுமதி வழங்கித் தீர்ப்பு வழங்கினார்.
ஆனால், இந்தச் சாதகமான தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது குறித்து இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்த இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அனுதினமும் தங்களது வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதும், நீதிமன்றம் சென்று நீதி பெறுவதும், பிறகு அந்த நீதி மறுக்கப்படுவதும் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத கொடுமை. இந்த கொடுமைகளைத் தமிழகத்தில் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள். பெருமாள் கோயில்பட்டியில் இந்துக்கள் சிறுபான்மையானால், நீதிமன்ற அனுமதி இருந்தாலும்கூடத் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடியாது என்பது இதன் மூலம் கண்கூடாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் நசுக்கும் திராவிட மாடல் தி.மு.க., அரசை, இனி வரும் காலங்களில் ஓட்டு என்ற ஆயுதம் கொண்டு ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று ஆவேசமாகக் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 144 தடை உத்தரவு, அரசியல் ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கு ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
