நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியைத் தேடும் பணி, காவல் துறையினரின் எல்லைப் பிரச்சினை காரணமாக மந்தமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). கூலித்தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நேற்று (டிசம்பர் 9) நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, நிலக்கோட்டை அருகே உள்ள கூட்டாத்து அய்யம்பாளையம் என்ற இடத்தில் வைகை ஆற்றில் நண்பகல் 12 மணி அளவில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் ராஜ்குமார் அடித்துச் செல்லப்பட்டார். உடன் இருந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நேற்று மதியம் முதல் இன்று காலை வரை ராஜ்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராஜ்குமாரின் உறவினர்கள் புகார் அளிப்பதற்காக முதலில் விருவீடு காவல் நிலையம் சென்றனர். ஆனால், “சம்பவம் நடந்த இடம் வத்தலக்குண்டு காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது” என்று கூறி, புகாரை ஏற்க விருவீடு போலீசார் மறுத்துள்ளனர்.
இதையடுத்து, வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்குச் சென்று உறவினர்கள் புகார் அளித்தபோது, அங்கும், “சம்பவம் நடந்த இடம் விருவீடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது” என்று கூறி, புகாரை ஏற்க வத்தலக்குண்டு போலீசார் மறுத்துள்ளனர். சில காவலர்கள், சம்பவம் நடந்த இடம் நிலக்கோட்டை காவல் நிலையத்தின் கீழ் வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த எல்லைப் பிரச்சினையின் காரணமாக, விருவீடு மற்றும் வத்தலக்குண்டு காவல் துறையினர் நேற்று முதல் தற்போது வரை வழக்குப் பதிவு செய்யவில்லை.
வழக்கு பதியப்படாததால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைக் கண்டுபிடிக்க வேண்டிய தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியைத் தொடர்வதில் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் ராஜ்குமாரைத் தேடும் பணி மந்தமடைந்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் விளைவாக, ராஜ்குமாரின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, வத்தலக்குண்டு – விருவீடு சாலை, செக்காபட்டி என்ற இடத்தில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே காவல் துறை மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
















