தஞ்சாவூர் :
பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஏழு மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் எட்டுப்புளிக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில், கரம்பயம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வகுப்பறையில் பாடம் நடத்தும் போது மாணவி ஒருவரை எழுந்து வாசிக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் மாணவியிடம் ஒழுங்குக்கேடான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயாவிடம் புகார் அளித்தனர். ஆனால் தலைமை ஆசிரியை தேவையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
பின்னர் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளி வளாகத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஆறு மாணவிகளும் இதேபோன்ற தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் பாஸ்கர் மற்றும் புகாரை புறக்கணித்த தலைமை ஆசிரியை விஜயா ஆகியோரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரே இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது, பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















