திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகமான நிகழ்விற்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் எனக் கூறி, முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநிலக் கழகச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அரசுப் பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது ஒட்டுமொத்த மாநிலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சாடினார். “வருங்காலத் தூணாகத் திகழ வேண்டிய ஒரு பிஞ்சு உயிர் பறிபோனது இந்த அரசுக்குச் சாபக்கேடு” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த ஆர்.பி. உதயகுமார், “அமைச்சருக்குத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நேரம் இல்லை; அவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குப் புகழ் பாடுவதிலும், அவரது ரசிகர் மன்றத் தலைவரைப் போலச் செயல்படுவதிலுமே முழு நேரத்தையும் செலவிடுகிறார்” என்று குற்றம் சாட்டினார். மாணவர்களின் பாதுகாப்பை விட அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நேரிடுவதாக அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் விளையாட்டுப் போட்டி குளறுபடிகளுக்காக அந்த மாநில அமைச்சர் ராஜினாமா செய்ததை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு மாணவனின் உயிரிழப்பிற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுத் தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா? என வினவினார்.
வெறும் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிவிட்டு இந்தச் சம்பவத்தை அரசு மூடி மறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், தமிழக முதல்வர் தனது மகனின் நண்பரைக் காப்பாற்ற நினைக்கிறாரா அல்லது நீதி வழங்குவாரா? என்ற கேள்வியையும் எழுப்பினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் சிதிலமடைந்துள்ளதற்குத் துறை அமைச்சரே முழுப் பொறுப்பு என்று குறிப்பிட்ட உதயகுமார், 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அனைத்துப் பள்ளிக் கட்டடங்களும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார். இந்தப் பள்ளிச் சுவர் விபத்து, தமிழகத்தில் உள்ள பழைய கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்த பெரும் விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.
















