கடலூர் :
விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை மாத்தூர், பவழங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வேன், கோ பூவனூர் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் உதவி செய்து, காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,
“பள்ளி வேனை ஓட்டுநர் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கியதே விபத்துக்குக் காரணம். மாணவர்களின் பெற்றோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
