பூந்தமல்லி – தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம்

பூந்தமல்லி – தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதும், ஜன்னல் பக்க இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் மாணவர்களின் பெரும் பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது.

இதுதொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பேருந்து படியில் தொங்கிக்கொண்டும், ஜன்னல் பக்க இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டும் பயணம் செய்தனர் . இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

பயணிகள் கூறுகையில், இது ஒரு நாள் சம்பவம் அல்ல; தினமும் காலை பள்ளி நேரத்திலும், மாலை வீடு திரும்பும் நேரத்திலும் தொடர்ச்சியாக நடைபெறும் வழக்கமான நிகழ்வாகவே மாறியுள்ளது என தெரிவித்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரித்தும், சில மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் பயணிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதுபோன்ற ஆபத்தான பேருந்து பயணம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன எனவும் இதில், சில இடங்களில் மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததும், உயிரிழந்ததும் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் விளக்கமளிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பேருந்து படியில் தொங்கிக்கொண்டு செல்லும் பயணத்தைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும், நெரிசலும், போதிய பேருந்து வசதி இல்லாததும் இந்த பிரச்னையை தீவிரமாக்குவதாக பேருந்து பயணிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சமூக ஆர்வலர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதுபோன்ற அபாயகரமான பயணம் மாங்காடு மட்டுமின்றி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல வழித்தடங்களில் நடைபெற்று வருவதாகவும், இது எந்த நேரத்திலும் பெரிய விபத்தாக மாறக்கூடிய நிலை எனவும் எச்சரித்தனர்.

மேலும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனுடன், இந்த பகுதிகளில் அதிக காவல் துறை கண்காணிப்புகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய அபாயகரமான பயணத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அரசு தற்போது சாலை பாதுகாப்பு மாதம் உள்ளிட்ட விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்காக தனிப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பு என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version